அன்பான மனைவி, அழகான குடும்பம், அமைதியான வாழ்வு. உலகில் அனைவரின் வாலிபப்பருவ கனவு. ஆனால் விதியின் கோலம், ஒருவர் கூட இந்த மூன்றையும் ஒருசேர வெகு நாள் அனுபவித்ததில்லை.
இதற்கு எவரிடமாவது சென்று காரணம் கேட்டால் கிடைக்கப்பெறும் காரணம் ஒன்று தான். இன்றைய தலைமுறையிடம் புரிதல் இல்லை என்பதே அனைவரும் கூறும் பெரிய காரணம். ஆனால் காலச்சக்கரத்தை சற்று பின்னோக்கி சுழற்றினால் அது தரும் சாட்சிகளும் சம்பவங்களும் வேறு, இந்த நூற்றாண்டிற்கு முன்னர் இருந்த அனைவரும் கண்ட வாழ்வும் வேறு.
காலம் முழுதும் உடனிருந்து காலம் கழிக்கப்போகும் அந்த நபரைக்கூட மணவறையில் தான் முதலில் கண்ட காலம் அது. திருமணங்கள் திருவிழாக்கள் போல நடந்தாலும், உள்ளே அது வெறும் வியாபாரமாக நடந்த காலம். இவ்வாறு அக்கால திருமணங்கள் நடந்திருக்க, இவர்களின் வாழ்வு புரிதல் அல்லது சமுதாயத்திற்கு பயந்த ஒரு வாழ்வே ஆகும்.
நம் காலத்தவர்க்கு வேண்டியது வெறும் புரிதல் அன்று. அதைப்பெருவதற்க்கான சந்தர்ப்பம். அளவு கடந்த அன்பும் காதலும் கொஞ்சி விளையாடும் தம்பதியின் அமைதிக்கு வேண்டியது வெறும் 5 நிமிட ஆழமான உரையாடல். இதுவே புரிதலின் ஆரம்பம்.
பிரச்சனைகள் எவ்வளவு இருந்தாலும் 5 நிமிடம் அமர்ந்து அதை ஒருவருக்கொருவர் மற்றவரை பேச விட்டு, தான் அதை பொறுமையாக கேட்டால் அங்கு தொடங்கும் புரிதல். நம்மை நேசிப்பவர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது இலட்சங்களும் கோடிகளும் அல்ல, நாம் கொடுக்கும் சில நிமிடங்களும், நம்மிடமிருந்து வரும் அன்பு வார்த்தைகளும் மட்டுமே.
இந்த இரண்டை உங்களின் பிரியமானவர்களுக்குப் பரிசாக்குங்கள். உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாவது உறுதி.